இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

வியாழன், 28 நவம்பர், 2013

உற்ற நண்பன் இயேசு!



வாழ்க்கையில் பலவிதமான காரியங்களை அருமையாக முழுமையாக நாம் அனுபவிக்கின்றோம். பலவிதமான உணவுகளை உட்கொள்ளுகிறோம். பலவித விதமான உடைகளை அணிகிறோம். பலவிதமான நபர்களோடு பழகுகிறோம். ஆயினும் விருப்பமான உணவு எது? பிடித்த நிறம் எது? இப்படி கேள்வி கேட்கப்படும்போது நாம் ஏதேனும் ஒன்றையே பதிலாக சொல்வோம். “இன்ன நிறம் எனக்குப் பிடிக்கும் அல்லது “இதுதான் எனக்குப் பிடித்த சாப்பாடுஎன கூறுவோம். இதற்கு காரணம் என்ன? அதனை நாம் ருசிபார்த்திருப்பதினால் அல்லவா!
 
     இதேபோல் வாழ்வில் மிக முக்கியமான ஒன்று நட்பாகும். ஒவ்வொரு நபர்களுக்கும் தமது வாழ்க்கையில் குறிப்பிட்ட ஒருவரை உற்ற நண்பனாக சுட்டிக் காட்டமுடியும். நட்பு இனிமையானது என்பது உலகறிந்த உண்மை. 'உன் நண்பன் யார் என்று சொல். நீ யார் என்று நான் சொல்லிவிடுவேன் என்கிறது ஒரு பழமொழி. சிலரை அவர்களுடைய நண்பர்களை வைத்தே அவர் இப்படிப்பட்டவர் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். உன்னுடைய நண்பன் யார்? உண்மையில் நண்பர்கள் நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
     உன் சகநண்பர்கள் தங்களுக்கேற்றபடி உன்னை மாற்றிவிட முற்படுவார்கள். ஆகவே, உன் நண்பன் யார்? யாரை நீ உன் நண்பனாக தொிந்தெடுக்கப்போகின்றாய் என்பதில் நீ மிகவும் கவனமாயிருக்க வேண்டும். ஏனெனில் நண்பர்களால் உன் வாழ்க்கை சீரழியவும்கூடும். செழிப்படையவும் கூடும். நமது வாழ்வில் நல்ல நண்பர்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவை. அவர்களின் நட்பைக் காட்டிலும், அவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறார்கள் என்பது தான் மிகமிக முக்கியமான காரியமாகும். நல்ல நண்பன் நம் ஒவ்வொருவருக்கும் தேவை! “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்.” (நீதிமொழிகள் 17:17).
     இரண்டு கிறிஸ்தவ நண்பர்கள் ஒன்றாக கல்லூரியில் படித்தார்கள். அவர்களுடைய கடைசி இறுதித்தேர்வு எழுதிய பின் அவர்கள் இருவரும் பிரிந்து செல்லும் தருணம் வந்தது. அந்தக் கடைசி நிமிடத்தில் தன் சக நண்பனுக்கு இப்படியாக ஒருவன் 'ஆட்டோகிராப் எழுதிக் கொடுத்தான். 'என்னுடைய நண்பனே! என்னுடன் சேர்ந்து நீ பல நாட்களாக ஜெபித்திருக்கிறாய்! விளையாடியிருக்கிறாய். சண்டை பிடித்திருக்கிறாய். சமாதானமாகி இருக்கிறாய்! ஆயினும் நாம் பிரிகின்றோம். எனினும், என் நண்பனே, எனது உற்ற நண்பனை நீ கடைசிவிரை மறந்துவிடாதே! அவரை நீ அறிவாய்!” இப்படிக்கு உன்னுடைய உயிர் தோழன் என்று தன்னுடைய சொந்தக் கையொப்பத்தையிட்டு தன்னுடைய சக கிறிஸ்தவ கல்லூரித் தோழனுக்கு எழுதிக்கொடுத்தான். பின்னால் சிறுகுறிப்பு: 'உன் நண்பனாகிய எனது உற்ற நண்பன் இயேசு கிறிஸ்து என்பதை நீ அறிவாய் என்று இருந்தது.
     ஆம். ஒருவன் இயேசு கிறிஸ்துவை தன் நண்பனாகப் பெற்றிருந்தால், அவரை தன் நண்பனுக்கும் அறிமுகம் செய்பவனாக இருப்பான். நண்பர்கள் ஒருவரை ஒருவர் தாங்கவும் உதவசெய்யவுமே இருக்கின்றார்கள். நண்பர்கள் தங்கள் நட்பை இரகசியமாக மட்டும் தொடரமாட்டார்கள். ஊரே அறிய நட்பாக இருப்பார்கள். தங்கள் நட்பிற்காக உயிரையும் கொடுக்க விரும்புவார்கள். அப்படியாயின், இன்றே உனது நண்பனுக்கு இயேசுவை அறிமுகப்படுத்துவாயா? நீயும் அவரை உனது உற்ற நண்பனாக ஏற்றுக்கொண்டு அவரோடு பழகிப்பார். நீயே ஆச்சாியப்படும்படி உன் வாழ்க்கை இனிமைமிக்க ஒன்றாகும். நீ உனது வாழ்க்கையில் என்றென்றும் மாறாத இனிய நட்பினை கண்டிடுவாய்!

கருத்துகள் இல்லை: